ராஜபாளையம் அருகே பழங்கால மக்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு

ராஜபாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2017-10-31 22:45 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் செல்லும் வழியில் முறம்பிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வாழவந்தாள்புரத்தில் பழங்கால சிவலிங்க, நந்தி சிற்பங்கள் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியருமான கந்தசாமி அங்கு களப்பணியில் ஈடுபட்ட போது, அங்கு பழங்கால மக்கள் வாழ்ந்து வந்துள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து கந்தசாமி கூறியதாவது:– சோழபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாழவந்தாள்புரம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வாசுதேவநல்லூர் மற்றும் உள்ளாறு வழியாக சோலைசேரி வந்தடைந்து தேவியாறாக பாய்ந்து வெம்பக்கோட்டை அணையை அடைகிறது.

தேவியாற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், மக்கள் பயன்படுத்திய கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகளும், பழங்காலத்தில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெரிய செங்கற்களும் பெருமளவில் காணப்படுகின்றன. நிலங்களை உழவு செய்து வாழ்ந்த மக்களுடைய வீடுகளின் எச்சங்களாக பானை ஓடுகளும், 1 அடி நீளமும், வு அடி அகலமுள்ள செங்கற்களும் ஏராளமாக கிடைத்தன. இதை வைத்து பார்க்கும் போது இப்பகுதியில சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால மக்கள் வாழ்ந்து வந்தது தெரிய வருகிறது. அதோடு மட்டுமன்றி நுண்கற்காலக் கருவிகளும் தென்படுகின்றது.

வாழவந்தாள்புரத்தின் மற்றொரு சிறப்பாக 13–ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்க மற்றும் நந்தி சிற்பங்கள் காணப்படுகின்றன. 6 அடி உயரமுள்ள சிவலிங்கத்தில் சிவன், பார்வதி பிரிவாக இரண்டு கோடுகள் அமைந்துள்ளன. இந்த கற்சிலை எட்டு பட்டைகளை கொண்டுள்ளது. கற்களால் பீடம் அமைத்து சிவலிங்கத்திற்கு நேர் எதிரே 5 அடி நீளமுள்ள இரண்டு நந்தி சிற்பங்கள் இடைவெளி விட்டு காணப்படுகின்றன.

இந்த நந்தியை கருங்கல்லால் மிக நேர்த்தியாக உயிரோட்டம் உள்ள நிலையில் செதுக்கியுள்ளனர். நந்தியின் அழகிய சாந்தமான முகம், நந்தியின் கழுத்தில் 23 மணிகள் தொங்கிய நிலையில் சங்கிலியால், கழுத்து சுற்றப்பட்டும், முன்னங்கால்களையும், பின்னங்கால்களில் வாலை சுருட்டி வைத்தும் செதுக்கியுள்ளனர். அதே போன்ற மற்றொரு நந்தியும் அபிஷேகங்கள் செய்வதற்கான வடிகால்கள் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ளன.

தேவியாற்றங்கரையோரம் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டால் மேலும் பழங்கால மக்களின் வாழ்வியல் ரகசியங்கள் வெளிவரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு பற்பல கல் சிற்பங்கள் ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இவற்றில் ஆண்,பெண் சிற்பங்களும், பூதகண சிற்பமும் அடங்கும். ஆற்றில் பல கட்டுமான கற்களும், இரண்டு நந்தி சிற்பங்களும் சிதைவடைந்த நிலையில் புதரில் அமைந்துள்ளன. தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ள இந்த சிவலிங்க நந்தி சிற்பங்கள் மூலம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பெரிய சிவன் கோவில் இருந்துள்ளதை அறியமுடிகிறது. சோழபுரத்தில் உள்ள சிவலிங்கத்தை ஒத்து அமைந்திருப்பதால் 12, 13–ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. மண்ணிலிருந்து கிடைத்த சிவலிங்கத்தை கிழக்கு நோக்கி அமைத்து 2 நந்தி சிற்பங்களையும் சேர்த்து இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

தற்போது பிரதோ‌ஷ நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகின்றது. இங்குள்ள சுமார் 10 சென்ட் அளவு நிலத்தை செப்பனிட்டு திறந்த வெளியில் அமைந்துள்ள சிவலிங்க, நந்திகளை கொண்டு கோவில் கட்டுவதற்காக ஊர் பெரியோர் குழு அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இங்குள்ள அம்மன் கோவிலை வாழவந்தம்மன், வாழியம்மன் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவிலுக்கு சிவகிரி ஜமீன்தார் தேவதானமாக நிலங்கள் வழங்கியதாகவும் தெரிகிறது. கோவில் பரிவார தெய்வங்களில் வெறியாண்டி என்று நவகண்ட சிற்பத்தை வழிபட்டு வருகிறார்கள். தன் வாளினால் தன் தலையை தானே வெட்டுவது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மாறுகண் மற்றும் கண் நோய் உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கிச் சென்றால் கண்பார்வை தெளிவடைவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்