தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் கருகும் அபாயம் வடகிழக்கு பருவமழை கைக்கொடுக்குமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை கைக்கொடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
வறட்சிதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு காத்து இருக்கின்றனர். அக்டோபர் மாதத்தில் சராசரியாக 150.70 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் விவசாயத்துக்கு போதுமானதாக இல்லை. எந்த குளங்களும் நிரம்பாததால் விவசாய பணிகளை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
கருகும் அபாயம்அதே நேரத்தில் கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. அதன்படி மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் சுமார் 25 ஆயிரம் எக்டரும், பயறு வகை பயிர்கள் சுமார் 40 ஆயிரம் எக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிர்கள் முளைத்து வளர்ந்து உள்ளன. அதன் தொடர்ச்சியாக மழை பெய்யாததால் பல இடங்களில் பயிர்கள் கருகும் நிலை உருவாகி உள்ளது.
ஓரிரு நாட்களுக்குள் மழை பெய்தால் மட்டுமே மானாவாரி பயிர்கள் வளர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கருமேகங்கள் மட்டும் திரண்டு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் மழை பெய்யவில்லை.
வடகிழக்கு பருவமழைமாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காப்பாற்றுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் 5 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 4 மி.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 3 மி.மீ. மழையும் பெய்து உள்ளது.