கொடைரோடு அருகே கார்கள் மோதல்; முதியவர் பலி 5 பேர் படுகாயம்

கொடைரோடு அருகே கார்கள் மோதல்; முதியவர் பலி 5 பேர் படுகாயம்

Update: 2017-10-22 22:45 GMT
கொடைரோடு,

மதுரை திருநகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அவருடைய மனைவி மரகதவள்ளி. அவர்களுடைய மகன் தினேஷ்பாபு (வயது 45). தீபாவளியையொட்டி ஜெயபிரகாஷ் குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு காரில் சென்றார். பின்னர் நேற்று அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களுடன் ஜெயபிரகாஷின் மாமனார் பாண்டுரெங்கன் (80) என்பவர் உடன் வந்தார். காரை தினேஷ்பாபு ஓட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி மாவூர் அணை பிரிவில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது, மற்றொரு கார் மீது இந்த கார் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஜெயபிரகாஷ் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் மற்றொரு காரில் வந்த குல்லலக்குண்டுவை சேர்ந்த தங்கப்பாண்டி (29), வாடிப்பட்டி அய்யங்கோட்டையை சேர்ந்த விமல்ராஜ் (31) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டுரெங்கன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்