திருப்பத்தூர் அருகே சோழர்கால வீரமங்கை நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் அருகே சோழர்கால வீரமங்கை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2017-10-22 22:45 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார் மற்றும் தொல்லியல் ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் திருப்பத்தூர் அருகே உள்ள ஜல்லியூர் என்ற இடத்தில் களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஜல்லியூருக்கு மேற்கே மானவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த நடுகல் ஒன்றை கண்டறிந்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் தோண்டி எடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தமிழ்த்துறை பேராசிரியர் பொன்.செல்வகுமார் ஆய்வில் ஈடுபட்டவர்களை பாராட்டினார்.

இதுபற்றி பேராசிரியர்கள் கூறியதாவது:-

வீரமங்கை

இந்த நடுகல்லானது ஒரு வீரப்பெண்ணுக்கு எடுக்கப்பட்டதாகும். நடுகல்லில் காணப்படும் வீரமங்கை இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்திய நிலையில் காணப்படுகிறார். இடையில் கச்சையுடன் சிறிய கத்தியினை வைத்துள்ளார். போர்புரிகையில் அணியும் ஆடையினை இவர் அணிந்துள்ளார். காலில் வீரக்கழல் காணப்படுகிறது. கழுத்தில் ஆபரணமும், காதில் வளையமும், தலையில் கூந்தலை முடிந்து பெரிய கொண்டையாகவும் முடிந்துள்ளார்.

இச்சிற்பமானது கல்லை குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப வேலைபாடுகள் மற்றும் தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, இந்த நடுகல் 12-ம் நூற்றாண்டையொட்டி பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்க கூடும்.

இந்த நடுகல் நடைபெற்ற போரில் தம்பகுதியை மீட்க போர் புரிந்து வீரமரணம் அடைந்த பெண்ணுக்காக எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கொள்ளையர்களிடம் இருந்து தம் ஊரினை காக்க போரிட்டு வீரமரணம் அடைந்த பெண்ணை போற்றுவதற்காக எடுக்கப்படதாகவும் இருக்கலாம். தமிழகத்தில் இதுவரை கிடைக்கப்பட்ட நடுகற்களில் பெண்களுக்கென எடுக்கப்பட்ட நடுகற்கள் எண்ணிக்கையில் குறைவேயாகும்.

அவ்வகையில் இந்நடுகல் பெண்ணுக்கென எடுக்கப்பட்ட சிறப்பான நடுகற்களின் முக்கிய இடம் பெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்