நாங்குநேரி அருகே விவசாயி கொலையில் நண்பர் கைது

நாங்குநேரி அருகே விவசாயி கொலையில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-22 22:15 GMT
நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி-வள்ளியூர் நாற்கர சாலையின் அருகே ஆழ்வார்குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ரெயில்வே கேட் அருகில் கடந்த 14-ந் தேதி இரவு 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த பழனி (வயது 55) விவசாயி என்பது தெரியவந்தது. வீட்டில் இருந்து வெளியே சென்ற பழனியை ஆழ்வார்குளம் ரெயில்வே கேட் அருகே மர்ம கும்பல் வழிமறித்து கல்லால் அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

நண்பர் கைது

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சின்னப்பாண்டியை (43), நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர் கைது செய்தார்.

அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பழனியும், நானும் நண்பர்கள். பழனிக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டு. சம்பவத்தன்று நாங்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தினோம். பின்னர் இருவரும் வீட்டுக்கு செல்லும் போது, பழனி என்னை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். நான் மறுத்ததால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், அங்கு கிடந்த கல்லால் பழனியை அடித்துக் கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்