பாதாம் பருப்பு கிரீடம்

மலர்களை கொண்டு மாலைகள், கிரீடங்கள் காலங்காலமாக தயார்செய்யப்பட்டு வருகின்றன.

Update: 2017-10-22 08:55 GMT
லர்களை கொண்டு மாலைகள், கிரீடங்கள் காலங்காலமாக தயார்செய்யப்பட்டு வருகின்றன. புதிதாக உலர் பழங்கள், ஏலக்காய், மக்காச்சோளம், பாதாம்பருப்பு, ஸ்ட்ராபெரி பழங்கள் போன்றவைகளில் எல்லாம், தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மாலைகளும், கிரீடங் களும் உருவாக்குகிறார்கள்.

முன்பு ரூபாய் நோட்டுகளில் மாலை தயாரித்து ஆண்டவனுக்கும், ஆளுபவர்களுக்கும் அணிவித்து வந்தார்கள். இப்போது அதிலும் புதுமையாக நாணயங்களைகொண்டும் மாலை தயாரிக்கிறார்கள். 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களில் இந்த மாலை தயாரிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர்கள் இந்த கலைத்தொழிலில் அதிக அளவில் ஈடுபடு கிறார்கள். 4 அடி உயரம்கொண்ட மாலைகள்கூட நூல், நார் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக கண்ணைக்கவரும் வகையில் கட்டப்படுகின்றன.

நாணய மாலைகளை தயாரிப்பதில் கை தேர்ந்தவரான பாபு சொல்கிறார்:

“நான் 12 வயதில் இருந்து மாலைகள் கட்டி வருகிறேன். இளைஞனானபோது அதில் புதிதாக எதையாவது உருவாக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது பற்றி சிந்தித்து புதிய விதமான மாலைகளை உருவாக்குகிறேன். தற்போது நான் உலர் திராட்சைகள், ஏலக்காய், அத்திப்பழம், ஸ்ட்ராபெரி, பாதாம் பருப்பு, வெட்டி வேர், தாமரை வேர், விளாமிச்சை வேர், கிராம்பு ஆகியவற்றை பயன் படுத்தி மாலைகள், சாமி கிரீடங்கள், புஷ்ப பிரபா வளையங்கள், புஷ்ப பல்லக்கு போன்றவைகளை தயாரித்து வருகிறேன்.

திருப்பதி, சபரிமலை, ஸ்ரீரங்கம், திருச்சியில் உள்ள ஆலயங்களுக்கு விதவிதமான பொருட்களில் மாலைகள் தயாரித்து வழங்கியிருக்கிறேன். 50 பேர் கொண்ட எனது குழுவினருடன் சென்று கோவில்களில் அலங்காரம் செய்துள்ளேன்.

5 ஆண்டுகளுக்கு முன் நாணயங்களை கொண்டு மாலை தயாரித்தேன். 3½ அடி உயர நாணய மாலை தயாரிப்பதற்கு ரூ.3 ஆயிரம் செலவானது. ஒரே அளவில் உள்ள 1 ரூபாய் நாணயங்களை வாங்கி, நூல், நார் இல்லாமல் மாலையாக உருவாக்கினேன். 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களை டாலர் போல் அதில் வடிவமைத்தேன். இது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அமெரிக்கா, கனடா, மலேசியாவில் உள்ள முருகன் கோவில்களுக்கும் நாணய மாலையை வாங்கி சென்றுள்ளனர். இந்த நாணய மாலையை வருடக்கணக்கில் சாமிக்கு அணிவிக்க முடியும் என்பதால் விரும்பி வாங்கி செல்கிறார்கள்” என்றார். 

மேலும் செய்திகள்