கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் 150 பேர் கைது

நிறுத்தப்பட்ட இலவச அரிசியை மீண்டும் வழங்க வேண்டும், மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட

Update: 2017-10-21 22:50 GMT
காரைக்கால்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் நேற்று அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அசனா எம்.எல்.ஏ. உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்த பல நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. மாறாக நடைமுறையில் இருந்து வந்த ஏழை-எளிய மக்கள் பயன்பெற்ற முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, இலவச அரிசி வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங் களை நிறுத்திவிட்டதாக அரசு மீது காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. குற்றம்சாட்டி சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது.

காரைக்கால் புதிய பஸ்நிலைய சிக்னல் அருகே அ.தி.மு.க.வினர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்துக்கு காரைக் கால் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் கே.ஏ.யு.அசனா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்பி.கருப்பையா, மாவட்ட பொருளாளர் எச்.எம்.ஏ.காதர் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 150 பேர் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது ஏழை-எளிய மக்களுக்கு நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச அரிசியையே மீண்டும் வழங்க வேண்டும், முதியோர் மற்றும் விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் உதவித்தொகை வழங் கப்படாமல் உள்ளது. அந்த உதவித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்தியது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வை அரசு உடனடியாக வாபஸ் பெற என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சாலை மறியலில் ஈடுபட்ட அசனா எம்.எல்.ஏ. உள்பட 150 அ.தி.மு.க.வினரை காரைக்கால் டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்