சினிமா துறையில் வாய்ப்பில்லாதவர்கள் மத்திய அரசை விமர்சித்து பிரபலமாக நினைக்கிறார்கள்

சினிமா துறையில் வாய்ப்பில்லாதவர்கள் மத்திய அரசை விமர்சித்து பிரபலமாக நினைக்கிறார்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

Update: 2017-10-21 22:30 GMT
மலைக்கோட்டை,

இந்து சமயத்திற்கும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எதிராக, மோடியை விமர்சிக்கும் விதமாக சினிமா துறையினர் செயல்பட்டு வருகின்றனர். மெர்சல் படத்தில் பல்வேறு தவறான பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் இருந்து அவதூறு கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும். நதிநீர் இணைப்புக்கு எதிராக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். மோடி நதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்க போகிறார் என்று அவதூறு பரப்புகிறார்கள்.

நதிகளை இணைப்பதற்கு எதிரானவர்கள், தமிழர் களுக்கும், தமிழகத்திற்கும் எதிரானவர்கள். சினிமா துறையில் வாய்ப்பில்லாதவர்கள் பலர் மத்திய அரசை விமர்சித்து பிரபலமாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் இதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

விஜய் பதில் சொல்லட்டும்

நடிகர் விஜய்யை நாங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. நாளையே விஜய் பா.ஜ.க.வில் சேர வாய்ப்புள்ளது. விஜய் பா.ஜ.க.விற்கு புதிதானவர் அல்ல. அவர் ஏற்கனவே மோடிக்கு ஆதரவு தெரிவித்தவர் தான். ஆனால் ஜோசப் விஜய் என்ற பெயரை ஏன் மறைத்து மக்களை ஏமாற்றுகிறீர்கள்?. சங்கீதா என்ற பெண்ணை ஜோஸ்பின் என மதம் மாற்றி திருமணம் செய்தாரா? இல்லையா?. விஜய் பதில் சொல்லட்டும். அதில் தவறு இருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.

சிலை அகற்றப்படும்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினருக்கும் சம உரிமை உள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து ஈ.வெ.ரா.வின் சிலை நிரந்தரமாக விரைவில் அகற்றப்படும். அந்த சிலை அங்கு இருக்கும் வரை அவருக்கும் கெட்ட பெயர் தான். வேண்டுமானால் அந்த சிலையை அகற்றி வேறு எங்காவது பூங்காக்களில் வைத்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாற்று கட்சியில் இருந்து விலகி இந்து மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு காவி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாநில துணை தலைவர் மாரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பரமானந்தம் முன்னிலை வகித்தார். இதில் அமைப்பாளர் சந்துரு, செயலாளர் பெரியண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்