அபராத தொகையை கர்நாடக மின்சார வாரியம் செலுத்தியது ஏன்? எடியூரப்பா கேள்வி
தனியார் நிறுவனம் கட்ட வேண்டிய ரூ.447 கோடி அபராத தொகையை கர்நாடக மின்சார வாரியம் செலுத்தியது ஏன்? என்று எடியூரப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில், மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. ஆனால் தனது ஆட்சியில் எந்த ஊழல்களும் நடைபெறவில்லை என்று சித்தராமையா கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் ஊழல்களை பா.ஜனதா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் கர்நாடக மின்சார கழகம் (கே.பி.சி.எல்.) ஈடுபட்டுள்ளது. மின்சாரத்துறை மந்திரியாக டி.கே.சிவக்குமார் இருந்தாலும், கர்நாடக மின்சார கழகம் முதல்–மந்திரி சித்தராமையாவின் தலைமையில் இயங்கி வருகிறது.
மாநிலத்தில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை மத்திய அரசிடம் இருந்து வாங்க, எம்டா என்ற தனியார் நிறுவனத்துடன் கர்நாடக மின்சார கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த தனியார் நிறுவனம் நிலக்கரி வாங்கியதில் செய்த தவறுக்காக ரூ.447 கோடி அபராதம் விதித்து, அதனை மத்திய அரசுக்கு செலுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அபராத தொகையை தனியார் நிறுவனம் செலுத்துவதற்கு பதிலாக கர்நாடக மின்சார கழகம் ரூ.447 கோடியை செலுத்தி உள்ளது
தனியார் நிறுவனம் கட்ட வேண்டிய அபராத தொகையை கர்நாடக மின்சார கழகம் செலுத்தியது ஏன்? என்பது குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவும், மந்திரி டி.கே.சிவக்குமாரும் விளக்கம் அளிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி அபராத தொகை கர்நாடக மின்சார கழகம் செலுத்தியதில் ஊழல் நடந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் செயல்பட்டு இருப்பது தெளிவாகி இருக்கிறது. தனியார் நிறுவனத்திற்கு பதிலாக கர்நாடக மின்சார கழகம் அபராத தொகையை செலுத்தி இருப்பதன் மூலம், அரசின் கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதுவும் அவசரகதியில் 24 மணிநேரத்தில் அபராத தொகையை மின்சார கழகம் செலுத்தியதன் நோக்கம் என்ன?. தனியார் நிறுவனத்துடன் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மை வெளியேவர வேண்டும் என்றால், உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக பா.ஜனதா சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.