பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலி: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மவுன அஞ்சலி- ஆர்ப்பாட்டம்

பொறையாறில் போக்குவரத்து பணிமனை இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக தஞ்சையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Update: 2017-10-21 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் முருகன் தலைமையிலும், தஞ்சை ஜெபமாலைபுரம் நகர்கிளை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டம் பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக இறந்ததற்கு நீதி கேட்பது. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். பழமை வாய்ந்த கட்டிடத்தை ஆய்வு செய்யாத தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பலியான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு அறிவித்த நிதி போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிப்பதை தாமதிக்காமல் பணிஆணை வழங்க வேண்டும். கும்பகோணம்- நாகை மண்டலத்தில் உள்ள அனைத்து பணிமனைகள், ஓய்வறைகள், உணவகம், குளியலறை, கழிவறைகளை முறையாக ஆய்வு செய்து பராமரிக்கவும், பராமரிப்பு பணிகளுக்கு அரசு உரிய நிதி அளிக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தொ.மு.ச. நிர்வாகிகள் அன்பரசு, ஜெயச்சந்திரன், ஜெயவேல்முருகன், அம்பேத்கர் சங்க பொதுச்செயலாளர் இளங்கோவன், டி.எம்.எம்.கே. பொது செயலாளர் ராஜேந்திரன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி கென்னடி, சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் ராமசாமி, கண்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் கஸ்தூரி, தாமரைச்செல்வன், பொருளாளர் சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இறந்த தொழிலாளர்கள் நினைவாக 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்