குப்பைகளை அகற்றாத திருமண மண்டபம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கொசு உற்பத்தியாகும் வகையில் குப்பைகளை அகற்றாத திருமண மண்டபம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Update: 2017-10-21 22:30 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் மூவரசம்பட்டு ஊராட்சி பகுதிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது தெருக்களில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன. மாட்டு சாணங்களும் குவிந்து கிடந்தன. இதையடுத்து கால்வாய், தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோல் குப்பைகளை கொட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

பின்னர் அப்பகுதியினரிடம் டெங்கு கொசு உற்பத்தி குறித்து விளக்கி கூறிய மாவட்ட கலெக்டர், வீடுகளில் சேரும் குப்பைகளை துப்புரவு தொழிலாளர்களிடம்தான் வழங்கவேண்டும். காலிமனைகளிலோ, தெருக்களிலோ கொட்டக்கூடாது. வீடுகளையும், சுற்றுப்புற பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவரிடம், ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளுக்கான தொழிலாளர்களையும், வாகனங்களையும் அதிகப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் குப்பைகளை கொட்டி வைத்து, அவற்றை அகற்றப்படாமல் இருந்ததாக ஒரு திருமண மண்டபம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்’’ என்றார்.

அதேபோல் வேளச்சேரி பகுதிகளில் சென்னை மாவட்ட கலெக்டர் டெங்கு விழிப்புணர்வுக்காக வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘முதல்–அமைச்சரின் உத்தரவின்பேரில் டெங்கு காய்ச்சலை தடுக்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வீடு வீடாக சென்று டெங்கு கொசு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டெங்கு காய்ச்சலை ஒழிக்க முதல்–அமைச்சர், அமைச்சர்கள் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுகிறோம். 1,300 பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். அரசும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் கொசு ஒழிக்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்