பஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும்: தி.மு.க. நிர்வாகிகள் நாராயணசாமியிடம் நேரில் வலியுறுத்தல்

புதுவையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தி.மு.க. நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினார்கள்.

Update: 2017-10-20 23:30 GMT

புதுச்சேரி,

புதுவையில் பஸ் கட்டணம் 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வினை வாபஸ்பெறக்கோரி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கட்டண உயர்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்களான சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், துணை அமைப்பாளர்கள் அனிபால்கென்னடி, நிர்வாகிகள் தைரியநாதன், சக்திவேல், வேலவன் மற்றும் பலர் முதல்–அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மேலும் பஸ் கட்டண உயர்வினால் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி குறித்தும் வேதனையுடன் எடுத்துக்கூறினார்கள்.

எங்கள் தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆதரவுடன் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. ஆளும் அரசுக்கு ஆதரவு அளித்தாலும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் தி.மு.க. எப்போதும் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.

அப்படியிருந்தும் புதுச்சேரி மக்களை பாதிக்கின்ற வீட்டுவரி, குடிநீர் வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவை தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு. கூட்டணி கட்சி என்ற முறையில் எங்களிடம் பெயரளவிற்கு கூட கலந்து ஆலோசிக்கவில்லை. இதுபோன்று காங்கிரஸ் அரசு எடுக்கின்ற மக்கள் விரோத நடவடிக்கைக்கு தி.மு.க.வும் துணை நிற்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். அரசின் அறிவிப்புகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்.

புதுவை மக்கள் ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை விதிப்பு, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பண்டிகை நாளை கசப்படைய செய்யும் வகையில் பஸ் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த குழு அமைக்கப்பட்டது. 3 முறை அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு பலவித அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதியில் யாருக்கும் பாதிப்பின்றி கட்டணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பஸ் கட்டண உயர்வு குறித்து ஏன் விவாதிக்கப்படவில்லை?

பக்கத்து மாநிலங்களைவிட புதுச்சேரியில் அதிக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இந்த பஸ் கட்டண உயர்வை உடனடியாக காங்கிரஸ் அரசு வாபஸ்பெற வேண்டும். இதுசம்பந்தமாக கூட்டணி கட்சியான தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துபேச வேண்டும்.

குறைந்தபட்சமாக 20 சதவீதம் பஸ் கட்டணம் மட்டுமே உயர்த்தவேண்டும் என்பது தி.மு.க.வின் எண்ணம். இதை தாங்கள் பரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவினை பெற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்