மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு சித்தராமையா கடிதம் "கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கக்கூடாது"

கைவினை பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு, முதல்–மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-10-20 22:21 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைவினை பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) விதிக்கப்பட்டு இருப்பதால், அந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கைவினை பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரி கிராம சேவா சங்கத்தை சேர்ந்தவர்கள் முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்து மனு கொடுத்திருந்தார்கள்.

அதே நேரத்தில் கைவினை பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி பிரபல நாடக கலைஞரான பிரசன்னா பெங்களூருவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு, முதல்–மந்திரி சித்தராமையா கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:–

கைவினை பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதால், அந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தான் கைவினை பொருட்கள் தயாரிப்பில் அதிக அளவில் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே கைவினை பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். இதுபற்றி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அவ்வாறு வரி விலக்கு அளித்தால், இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கும் கிராமப்புற மக்களுக்கு அது உதவியாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படியும், அதுபற்றி ஆலோசித்து நல்ல முடிவு கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தன்னிடம் கிராம சேவா சங்கத்தினர் கொடுத்த மனுவையும் மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு, முதல்–மந்திரி சித்தராமையா அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்