சம்பள உயர்வு, போனஸ் கேட்டு மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் சம்பள உயர்வு, போனஸ் கேட்டு 2-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2017-10-20 23:00 GMT
கோவை,

கோவை மாநகராட்சியில் சுகாதார பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கிளனர், துப்புரவு பணியாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். டிரைவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.7,500-ம், கிளனருக்கு ரூ.6 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் கேட்டு, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 17-ந் தேதி போனஸ் வழங்கப்பட்டது. அரசு விதிப்படி போனஸ் வழங்கப்படவில்லை என்றும், மிகக்குறைந்த தொகையே வழங்கப்பட்டது என்றும், 2 மாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் அவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.தொடர்ந்து கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. நேற்று காலையிலேயே அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் திரண்டு, அங்கு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சம்பள உயர்வு, வார விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பள உயர்வு, போனஸ் உள்பட கோரிக்கைகளை நிறைவேற்ற தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த குழுவை சேர்ந்தவர்கள் பரிசீலனை செய்து, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘மாநகராட்சி அதிகாரிகள் கூறியதை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் எழுதி கொடுக்கும்படி கூறி உள்ளோம். அதை அவர்கள் செய்வோம் என்று கூறி உள்ளனர். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

பொது சுகாதார பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவை மாநகர பகுதியில் ஏராளமான குப்பைகள்,தீபாவளிக்கு வெடித்த பட்டாசுகள்,கழிவுகள் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. சில இடங்களில் தெருநாய்கள் ரோடு வரை குப்பைகளை இழுத்து போட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று வீசும்போது அந்த குப்பைகள் காற்றில் பறந்து வீடுகளுக்குள் சென்றுவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குப்பைகளை சுத்தம் செய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்