சேலம் பச்சப்பட்டியில் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய 100 வீடுகள் இடிப்பு

சேலம் பச்சப்பட்டியில் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2017-10-20 23:00 GMT
சேலம்,

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த 4-ந் தேதி பெய்த கனமழையால் அம்மாபேட்டை குமரகிரி ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் அதன் உபரிநீர் அங்குள்ள கால்வாய் வழியாக வெளியேறியது. அந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள பச்சப்பட்டி, மாருதிநகர், அசோக்நகர், ஆறுமுக நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

ஏரி தண்ணீர் செல்லும் ராஜவாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த காரணத்தாலும், அந்த பகுதியில் வீடுகள், கழிப்பிடங்கள் போன்ற கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டிருந்ததாலும் தண்ணீர் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் ராஜவாய்க்காலுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில், ராஜவாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு உடனடியாக அதை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிக்கும் பணிகள் தொடங்கியது. குமரகிரி ஏரியில் இருந்து திருமணிமுத்தாறு வரையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராஜவாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மழை பெய்தாலும் தண்ணீர் தடையின்றி ராஜவாய்க்காலில் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்