டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக தஞ்சையில் கடைகள், வீடுகளில் கலெக்டர் ஆய்வு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக தஞ்சையில் உள்ள கடைகள், வீடுகளில் கலெக்டர் அண்ணாதுரை நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார்.

Update: 2017-10-20 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு அங்கமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக தஞ்சை கொடிமரத்துமூலை, கரந்தை, பள்ளியக்ரஹாரம், திருவையாறு ஒன்றியம் வளப்பக்குடி ஆகிய பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, நேரடி களஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியான கொடிமரத்து மூலையில் உள்ள ஒரு டீக்கடையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. இதையடுத்த தொட்டியில் இருந்த தண்ணீர் கீழே ஊற்றப்பட்டு, அந்த தொட்டியை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கரந்தை தமிழ் சங்கம் அருகில் சத்திரம் நிர்வாகத்திற்கு சொந்தமான பழைய கட்டிடத்தினையும், அங்குள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டியினையும், கடைத்தெருவில் உள்ள கடைகளையும், அந்தப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பள்ளியக்ஹாரம் சத்திய கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு வீட்டில் பயனற்று கிடந்த டயர்களில் டெங்கு கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் வகையில் இருந்த டயர்களை அப்புறப்படுத்தவும், அதன் உரிமையாளருக்கு ரூ.500-ம் அபராதம் விதித்தும் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

மேலும் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நோட்டீஸ் வினியோகித்து டெங்கு நோய் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறினார். இதேபோல, பள்ளி அக்ரஹாரம் கடைத்தெருவில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்குள்ள ஒரு இறைச்சி கடை முறையாக பராமரிக்காததால் அதன் உரிமையாருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. கடையின் பின்புற பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிடவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், மலேரியா அலுவலர் போத்திபிள்ளை மற்றும் தாசில்தார்கள் தங்கபிரபாகரன், லதா ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்