பாசனத்துக்காக பாலாறு- பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.

Update: 2017-10-20 22:45 GMT
பழனி,

பழனி அருகே உள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் மொத்த உயரம் 65 அடி. அணையின் நீர்மட்டம் 47.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 23 கனஅடி நீர் வரத்து உள்ளது. இந்த அணையில் உள்ள தண்ணீர் பழனி நகரில் உள்ள மக்களின் குடிநீருக்கும், பழனி பகுதியில் விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு அணையில் தண்ணீரை திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், அணையில் இருந்து தினமும் வினாடிக்கு 20 கனஅடி வீதம் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், பரமசிவம் எம்.எல்.ஏ., பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செல்லச்சாமி, சுப்புரத்தினம், வேணுகோபாலு, செயற்பொறியாளார் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்