விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் வாயில் கறுப்பு துணி கட்டிபோராட்டம்
பயிர்காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வாயில் கறுப்பு துணி கட்டிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
பயிர்காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வாயில் கறுப்பு துணி கட்டிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமைதாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு இதுவரை பயிர்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், உடனே அந்த தொகையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விவசாயிகள் வாயில் கறுப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் அவர்களிடம் உரிய தேதிக்குள் பணம் வழங்கப்படும் என்றார். இந்த பதிலில் திருப்தி அடையாத விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே பயிர்காப்பீட்டு நிறுவன அதிகாரியை கலெக்டர் பேசுமாறு கூறினார். அவர் பேசுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அவரை பேச விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் சரிவர பணம் வழங்கவில்லை அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்கள்.
கலெக்டர்:–பிசான நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து 1404 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் ஹெக்டேரில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு உள்ளது. பயிர்காப்பீட்டை பொருத்தவரை 8464 விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 15 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. 1026 விவசாயிகளுக்கு அடுத்த மாதம் 10–ந்தேதிக்குள் வழங்கப்படும். மற்ற பயிர்களுக்கு அடுத்தமாதம் 30ந–தேதிக்குள் வழங்கப்படும். இந்த பருவத்திற்கான நெற்பயிரை காப்பீடு செய்யவேண்டும். அனைத்து தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கசமுத்து:– ஒவ்வொரு மாதமும் பயிர்காப்பிட்டு தொகை குறித்து பேசவேண்டிய நிலை உள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை மரங்கள் பட்டுபோயிவிட்டன. தென்னை விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும்.
உதயசூரியன்:– ராமநதி–ஜம்பு நதி இணைப்பு கால்வாய்த்திட்டத்திற்கு நிலஅளவை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கவேண்டும் எனவே உடனே நிலம் கையகப்படுத்துவதற்கு தாசில்தார் நியமிக்கவேண்டும்.
ரூ.80 லட்சம் மோசடிகுருசாமி சிவகிரி– சிவகிரி பகுதியில் உள்ள ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதாக கூறி ரூ.80 லட்சம் வரை மோசடி செய்து உள்ளனர். இது குறித்து நான் பல முறை தெரிவித்து உள்ளேன். கூட்டுறவு இணைபதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கூட்டுறவு வங்கி செயலாளருக்கு பதிவு தபால் அனுப்பினேன். அந்த தபாலை வாங்க கூட அலுவலகத்தில் செயலாளர் இல்லை. அந்த அளவிற்கு கூட்டுறவு வங்கி மோசமான நிலையில் உள்ளது. இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கலெக்டர்:– கூட்டுறவுத்துறை துணைபதிவாளர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தபாலை வாங்க மறுக்கின்ற செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனிச்சாமி:– கிணறு வெட்டவும், கிணற்றை ஆழப்படுத்தவும் வங்கிகளில் கடன் கேட்டால் வங்கி அதிகாரிகள் விவசாயிகளை மதிப்பதில்லை ஆனால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நீங்கள் விவசாயிகள் கேட்கின்ற கடன்களை வழங்கவேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறுகிறீர்கள்.
கலெக்டர்:– வங்கி அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.