ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆதார்–வங்கி கணக்கு எண்களை ஜனவரி மாதத்துக்குள் இணைக்க வேண்டும்

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆதார்– வங்கி கணக்கு எண்களை ஜனவரி மாதத்துக்குள் இணைக்க வேண்டும் என வருங்கால வைப்புநிதியின் நெல்லை மண்டல ஆணையாளர் சனத்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர், பாளையங்கோட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதியின் நெல்லை மண்டல அலுவலகத

Update: 2017-10-20 20:45 GMT

நெல்லை,

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆதார்– வங்கி கணக்கு எண்களை ஜனவரி மாதத்துக்குள் இணைக்க வேண்டும் என வருங்கால வைப்புநிதியின் நெல்லை மண்டல ஆணையாளர் சனத்குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர், பாளையங்கோட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதியின் நெல்லை மண்டல அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம் 2016–ன் படி வருங்கால வைப்புநிதி நிறுவனம் தற்போது ஆதார் அடையாள அட்டையை தொழிலாளர்களுக்கு கட்டாயப்படுத்தி உள்ளது. அதன்படி வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தங்கள் கணக்குடன் இணைக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்களின் வைப்புநிதி பலன்களை பெறுவதற்கு தொழில் அதிபர்களின் ஒப்புதல் இல்லாமலே தங்களே நேரடியாக வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம்.

பழைய கணக்கில்...

ஒரு தொழிலாளி ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தை விட்டு விட்டு, வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால், தங்களின் ஆதார் எண், வங்கி கணக்கை விவரங்களை கொடுத்து பழைய வைப்புநிதி கணக்கில் உள்ள பணத்தை தற்போது உள்ள கணக்கில் மாற்றி கொள்ளலாம்.

புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மூலம் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை தெரிவித்து வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் தனியாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. அந்த இணையதளத்தில் தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

10 ஆண்டுகள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்கள் பலர் தங்கள் கணக்குடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்களை இணைக்க வில்லை.

ஜனவரி மாதம் வரை

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார், வங்கி கணக்கு எண்களை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லை என்றால், ஓய்வூதியம் கிடைக்காது. இந்த வாய்ப்பை ஓய்வூதியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஓய்வூதிய திட்டத்துக்காக தொழில் அதிபர்கள் செலுத்தும் பணத்தில் 8.33 சதவீதம் மத்திய அரசு திருப்பி கொடுக்கிறது.

நெல்லை மண்டல கட்டுப்பாட்டின் கீழ் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளன. இந்த திட்டத்தில் 5 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் 50 ஆயிரம் தொழிலாளர்களும் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த திட்டம் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும், அதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கவும் உதவும்.

3 ஆண்டுகள் வரை...

புதிய திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10–ந் தேதிக்குள் தங்கள் நிறுவனங்களின் கணக்குளை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்கும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் அதிபர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு வருங்கால வைப்புநிதியின் நெல்லை மண்டல ஆணையாளர் சனத்குமார் கூறினார்.

பேட்டியின் போது உதவி ஆணையாளர்கள் ரமேஷ், சந்திரநாத் பவன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்