திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கந்தசஷ்டி திருவிழாமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார்.
யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி– தெய்வானை அம்பாள்கள் கும்பங்கள் மற்றும் சிவன், பார்வதி உள்ளிட்ட பரிவாரமூர்த்தி கும்பங்கள் என மொத்தம் 46 கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோரிடம் தாம்பூலம் பெற்று கொண்ட காப்புகட்டிய சண்முகசுந்தரம் பட்டர் யாகசாலை பூஜையை தொடங்கினார்.
சுவாமி தங்க சப்பரத்தில் வீதி உலாயாகசாலையில் விக்னேசுவர பூஜை, புண்ணியாகவாசனம், பூதசுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிக்கால பூஜை நடந்த பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விரதம் தொடங்கிய பக்தர்கள்கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அதிகாலையில் கோவில் கடலில் புனித நீராடினர். பின்னர் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து, கோவில் கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். பெண்கள் கிரி பிரகாரத்தில் அடிபிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர்.
பக்தர்கள் முருக பெருமானின் திருநாமத்தை உச்சரித்தவாறும், அவரது திருப்புகழை பாடியவாறும் கோவில் வளாகத்தில் விரதம் இருந்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சூரசம்ஹாரம்6–ம் திருநாளான வருகிற 25–ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. 7–ம் திருநாளான 26–ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11.45 மணிக்கு சுவாமி– தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 8–ம் திருநாளான 27–ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் சுவாமி– தெய்வானை அம்பாள் பட்டினபிரவேசம் நடக்கிறது.
9–ம் திருநாளான 28–ந்தேதி (சனிக்கிழமை) முதல் 11–ம் திருநாளான 30–ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 12–ம் திருநாளான 31–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுக்கு பின்னர் சுவாமி– அம்பாள் திருவீதி உலா சென்று கோவில் சேர்கிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.