கிராம மக்கள் சாலைமறியல்; 75 பேர் கைது பஸ்கள் நிறுத்தத்தில் நின்று செல்ல கோரிக்கை

ஆழ்வார்திருநகரி அருகே நிறுத்தத்தில், பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தி, சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-20 21:15 GMT

தென்திருப்பேரை,

ஆழ்வார்திருநகரி அருகே நிறுத்தத்தில், பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தி, சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலைமறியல்

ஆழ்வார்திருநகரியை அடுத்த பால்குளம் விலக்கு பஸ் நிறுத்தத்தில் ஓரிரு தனியார் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் ஆழ்வார்திருநகரி வரையிலும் நடந்து சென்று, நெல்லை, திருச்செந்தூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர்.

எனவே அந்த கிராம விலக்கில் காலை, மாலை நேரங்களில் நெல்லை–திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் எஸ்.எப்.எஸ்.(அதிவிரைவு) பஸ் உள்ளிட்ட சில பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும், திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்களை வழங்கினர். ஆனாலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

75 பேர் கைது

இதையடுத்து அப்பகுதி மக்கள் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்த நேற்று காலையில் பால்குளம் விலக்கில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாராயணராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சரவணன், நகர தலைவர் இசக்கிமுத்து, நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், கிளை பொறுப்பாளர்கள் வேல்குமார், கணபதி, திருக்களூர் ஊர் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 75 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா (ஆழ்வார்திருநகரி), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் கைது செய்து, ஆற்றங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே பால்குளம் கிராமத்தைச் சேர்ந்த மேலும் சில பெண்கள் சாலைமறியலில் ஈடுபடுவதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் கைதானவர்கள் தங்க வைக்கப்பட்ட மண்டபத்துக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள், மண்டப வாசலில் அமர்ந்திருந்தனர்.

மேலும் செய்திகள்