மரத்தில் கார் மோதல் கணவன்-மனைவி உள்பட 7 பேர் பலி

ராமநத்தம் அருகே மரத்தில் கார் மோதியதில் கணவன்-மனைவி உள்பட 7 பேர் பலியாகினர்.

Update: 2017-10-19 23:15 GMT
விருத்தாசலம்,

கேரள மாநிலம் பத்தினந்திட்டா மாவட்டம் ஆனிக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா(32) அதே மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர்கள் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரகாஷ், பிரியா மற்றும் இவருடைய உறவினர்கள் பிரின்ஜோஸ்(23), பிரதீப்(33), ஜோஷி(24), குட்டி(29), மிதுன்(29) ஆகிய 7 பேரும் ஒரு காரில் கடந்த 17-ந் தேதி இரவு சென்னையில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டனர்.

காரை சென்னை கே.வி.என்.புரம் பகுதியை சேர்ந்த செல்வராசு மகன் சிவக்குமார்(29) என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு 12.30 மணி அளவில் இவர்கள் சென்ற கார் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பிரகாஷ், பிரியா, பிரதிப், ஜோஷி, குட்டி, மிதுன், டிரைவர் சிவக்குமார் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பிரின்ஜோஸ் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பிரின்ஜோசை மீட்டனர்.

இந்த விபத்தில் பிரின்ஜோஸ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திட்டக்குடி மற்றும் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் இந்த விபத்து பற்றி அறிந்து வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது மரத்தில் கார் மோதி 7 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்