திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி நண்பர்கள் 4 பேர் பலி

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி நண்பர்கள் 4 பேர் பலியானார்கள். தீபாவளி தினத்தன்று குளிக்க சென்றபோது, இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2017-10-19 23:15 GMT
திருச்சி,

திருச்சி விமானநிலையம் அருகே உள்ள வள்ளுவர்நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகன் ஆண்ட்ரூ (வயது 19). இவர் நாமக்கல்லில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் ஆண்ட்ரூவும், அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதாம்உசேன் என்கிற சாகுல்அமீது(25), முகமது இஸ்மாயில்(24), சிவகுருநாதன்(28), தேவராஜ்(18), நாகராஜ்(22) உள்பட 12 பேர் மோட்டார் சைக்கிளில் கல்லணைக்கு சென்றனர்.

அங்கு காவிரி ஆற்றில் இறங்கி அனைவரும் குளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, திருவளர்ச்சோலை பொன்னுரங்கபுரம் அருகே பொன்னிடெல்டா பகுதிக்கு வந்தனர். அங்கு சாகுல்அமீது, சிவகுருநாதன், முகமது இஸ்மாயில், ஆண்ட்ரூ ஆகிய 4 பேர் மட்டும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர். ஆற்றில் இறங்கியதும் உற்சாக மிகுதியால் ஆழமான பகுதிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் 4 பேருக்குமே நீச்சல் தெரியாததால், கரைக்கு திரும்ப முடியாமல் ஆழமான பகுதியில் தண்ணீரில் தத்தளித்தனர்.

இதனைக்கண்டு கரையில் நின்ற மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் 4 பேரும் நண்பர்கள் கண்முன்னே தண்ணீரில் மூழ்கினர். உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், ஸ்ரீரங்கம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று காவிரி ஆற்றில் குதித்து 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களும், மீனவர்களும் ஆற்றில் குதித்து 4 பேரையும் தேடினர்.

சிறிதுநேரத்துக்கு பிறகு அவர்கள் குளித்த இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் முகமதுஇஸ்மாயில், ஆண்ட்ரூ ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதன்பிறகு இருட்டி விட்டதால் மேலும் 2 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை. இதனால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். அப்போது காலை 7 மணி அளவில் உத்தமர்சீலி அருகே நடுவெட்டி என்ற இடத்தில் சாகுல்அமீது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து சிவகுருநாதனின் உடலும் பகல் 12 மணி அளவில் உத்தமர்சீலி அருகே மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டன. பலியானவர்களில் சாகுல்அமீது, முகமது இஸ்மாயில் ஆகியோர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தனர்.

சிவகுருநாதன் எம்.சி.ஏ. முடித்துவிட்டு வேலை தேடி கொண்டு இருந்தார். நேற்று மாலை 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்