பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6-ம் வகுப்பு மாணவி சாவு

ஆம்பூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-10-19 23:00 GMT
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தை சேர்ந்த கவிதா என்பவரின் மகள் ஜனனி (வயது 11). இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று தீபாவளி பண்டிகைக்காக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் அங்குள்ள சிறுமிகளுடன் ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்றுக்கு சென்று விளையாடினார்.

அப்போது பாலாற்று வெள்ளத்தில் சிறுமி அடித்து செல்லப்பட்டார். இதனால் உடன் சென்ற சிறுமிகள் கூச்சல் போட்டனர். இதனால் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தேடினர். ஆனால் ஜனனி கிடைக்கவில்லை.

உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி ஜனனியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்