டெங்கு காய்ச்சலை ஒழிக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் அதிகாரி பேச்சு

டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி த.உதயச்சந்திரன் கூறினார்.

Update: 2017-10-19 23:00 GMT
ஈரோடு,

தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பொதுமக்களை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

இதற்கான கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான த.உதயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலை கண்டறிய 45 வினாடிகளில் ரத்த அணுக்களின் (தட்டணுக்கள்) எண்ணிக்கையை துல்லியமாக கண்டறியும் நவீன கருவியை தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வழங்கினார். இந்த கருவி தலா ரூ.3 லட்சம் மதிப்புள்ளதாகும். மொத்தம் ரூ.69 லட்சம் மதிப்புள்ள 23 கருவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டு அறிந்தார். பின்னர் பேசிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றிட வேண்டும். இதற்காக அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை மட்டும் மேற்கொள்ளட்டும் என்று விட முடியாது. ஊரக வளர்ச்சித்துறை தீவிர தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வித்துறை மாணவ-மாணவிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக ஒரு மாணவரோ, மாணவியோ பள்ளிக்கூடத்துக்கு வராமல் விடுமுறை எடுத்தால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி பெற்றோரை தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டுப்பெற வேண்டும்.

வருவாய்த்துறையை சேர்ந்த பணியாளர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதியில் பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பதை கண்காணித்து, அப்படி பாதிப்பு ஏற்பட்டால் அது எந்த வகையான காய்ச்சல் என்பதை அறிந்து கொண்டு அறிக்கை தர வேண்டும். கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை கொண்ட சுகாதாரக்குழு அமைக்கப்பட்டு அந்தந்த பகுதியை சுகாதாரமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை ஒழிக்க அனைத்து துறையின் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் என்.சீனிவாசன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான், ஆவின் பொது மேலாளர் லதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மேனகா, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகாச்சலகுமார், முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, தாசில்தார் ஜெயக்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது மாவட்டத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்