மும்பையில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகை தமிழர்கள் உற்சாக கொண்டாட்டம் இன்று பெரிய தீபாவளி

மும்பையில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழர்கள் நேற்று உற்சாகமாக தீபாவளி கொண்டாடினர். இன்று பெரிய தீபாவளி கொண்டாடப்படுகிறது.

Update: 2017-10-19 00:20 GMT
மும்பை,

மும்பையில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் தந்தராஸ் பண்டிகையுடன் தொடங்கியது. தீபாவளி பண்டிகையை மும்பைவாசிகள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்கியும், இனிப்புகள் செய்தும் வழக்கமான கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

நேற்றுமுன்தினம் பெண்கள் பலரும் நகைகள் வாங்க ஆர்வம் காட்டினர். தீபாவளியையொட்டி மும்பைவாசிகள் இரவு தங்கள் வீடுகளில் வண்ண கோலங்கள் இட்டு தீபவிளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். மேலும் ‘கந்தில்’ எனப்படும் அலங்கார மின்விளக்குகளையும் தொங்க விட்டிருந்தனர்.
இதுதவிர நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கடைகள் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தன.

தீபாவளியின் இரண்டாவது நாளான நேற்று நகரசதுர்த்தசி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழர்கள் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்தனர். தீபாவளி பண்டிகையை தமிழகத்தில் உள்ளது போன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இரவு மத்தாப்பு, தரைசக்கரம், புஷ்வானம் கொளுத்தியும், தங்கள் வீடுகளில் செய்த இனிப்புகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இன்று (வியாழக்கிழமை) பெரிய தீபாவளி எனப்படும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) கோவர்த்தண பூஜையும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) பாவ்- பீஜ் பண்டிகையும் கொண்டாடுகிறார்கள்.

மேலும் செய்திகள்