திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி

திட்டக்குடி அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-10-19 01:30 GMT
திட்டக்குடி,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது34). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். இவரது மனைவி பிரியா(32). இந்தநிலையில் பிரகாஷின் மனைவியின் உறவினர் ஒருவரின் திருமணம் கேரளாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள முடிவு செய்த பிரகாஷ் ஒரு காரில், மனைவி பிரியா மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களான ஜோஷி(24), குட்டி(29), மிதுன்(29), பிரின்ஜோஸ், பிரதிப் ஆகியோருடன் புறப்பட்டு சென்றார்.

காரை சென்னை கே.வி.என்.புரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(29) என்பவர் ஓட்டினார். இவர்கள் சென்ற கார், நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலையோரம் நின்ற புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

மேலும் காரில் பயணம் செய்த பிரகாஷ், பிரியா, பிரதிப், ஜோஷி, குட்டி, மிதுன், சிவக்குமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரின்ஜோஸ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி பலியானவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த பிரின்ஜோசை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலியான 7 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரின்ஜோஸ் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்