பள்ளிகொண்டாவில் பரபரப்பு கோவிலுக்குள் திருட முயன்ற 3 சிறுவர்களை பூட்டிய நிர்வாகிகள்

பள்ளிகொண்டா நாகநாதீஸ்வரர் கோவிலுக்குள் புகுந்து திருட முயன்ற 3 சிறுவர்களை நிர்வாகிகள் கோவிலுக்குள் பூட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-19 00:00 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள நாகநாதீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்றுமுன்தினம் காலை கோவிலில் பூஜை முடிந்ததும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றபின்னர் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் கோவிலில் 7 அடி உயரம் உள்ள மதில் சுவரில் ஏறி 3 சிறுவர்கள் உள்ளே குதித்துள்ளனர். அவர்கள் கோவிலில் உண்டியல் இருந்த சன்னதி கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று உண்டியலை உடைத்துக்கொண்டிருந்தனர். சம்பவத்தன்று பிரதோஷம் என்பதால் கோவிலின் முன் கதவுகளை திறந்து கொண்டு பிரசாதம் தயாரிப்பதற்காக நிர்வாகிகள் மற்றும் சமையல்காரர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது மூலவர் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் குருக்கள் தான் உள்ளே இருக்கிறார் என்று அவரை அழைத்துள்ளனர்.

அந்த நேரத்தில் கோவில் உள்ளே இருந்து 3 சிறுவர்களும் அதிர்ச்சியடைந்து வெளியே வர முயன்றனர். ஆனால் நிர்வாகிகள் அவர்கள் 3 பேரையும் உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டு வெட்டுவானத்தில் உள்ள கோவில் அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அலுவலர் பாபு அது குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து உள்ளே பூட்டப்பட்ட 3 சிறுவர்களையும் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் அவர்கள் பள்ளிகொண்டாவை சேர்ந்த 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

சிறுவர்கள் 3 பேரும் உண்டியலை உடைத்துக்கொண்டிருந்தபோதே கோவிலுக்குள் நிர்வாகிகள் சென்றதால் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தடுக்கப்பட்டது.

பட்டப்பகலில் 3 சிறுவர்கள் 7 அடி உயரம் உள்ள கோவில் மதில் சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்று திருட முயன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்