தடைகளை களைந்து வளர்ச்சி காண்போம் நாராயணசாமி தீபாவளி வாழ்த்து
தடைகளை களைந்து வளர்ச்சி காண்போம் என்று தீபாவளி வாழ்த்துச் செய்தியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
தீபாவளியை முன்னிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
அனைத்து சமுதாய மக்களும் சாதிமத பேதமின்றி உற்றார்– உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கூறி இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
தீயவை அகன்று நல்லவை நடைபெற புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினருடன் தீபாவளி திருநாளை புதுவை மாநில மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். தைப்பொங்கலுக்கு அடுத்தாற்போல் மிக விமரிசையாக கொண்டாடப்படும் விழா தீபாவளி திருநாள். இந்த நல்ல நாளில் பெண்கள் விரதமிருந்து தங்கள் குடும்பம் வளமோடு வாழ அம்மனை பிரார்த்திப்பார்கள்.
பாரம்பரியமான இந்த விழாவில் நகரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து வீடுகளில் தீபஒளி ஏற்றி, தங்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கவேண்டும் என்று கடவுளை வணங்கி வழிபடுவார்கள்.
மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கை வளம்பெற வேண்டும் என்று நாம் ஒருங்கிணைந்து பாடுபடும் இந்த வேளையில் மக்கள் நலத்திட்டங்களை முடக்க சிலசக்திகள் செயல்படுகின்றன. அந்த தடைகளை எல்லாம் களைந்து மாநிலத்தில் வளர்ச்சி காண்போம் என்ற சூளுரையை இந்த நன்னாளில் நாம் அனைவரும் எடுத்துக்கொள்வோம்.
சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி தீயதை அழித்து நல்லது வெற்றி பெற்றதையும், இருளை நீக்கி, ஒளி வெற்றி பெற்றதையும் தெரிவிக்கிறது. வீடுகளில் ஏற்றும் தீபஒளி, நமது உள்ளத்திலும் ஏற்றப்பட வேண்டும். அதாவது நமது மனதில் உள்ள இருள் என்னும் தீமைகள் ஒழிந்து, வெளிச்சம் என்னும் நன்மைகள் ஏற்பட வேண்டும். தீமையையும், அதர்மத்தையும் அழித்து, நன்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் வலிமையும் கிடைக்கவேண்டும்.
இத்தீபாவளி திருநாள் புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல் நலம், செல்வம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவைகளை கொண்டுவருவதாக அமையட்டும். தீபாவளி திருநாளை மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து சமத்துவம், சகோரத்துவத்தை போற்றும் வகையிலும் கொண்டாடுவோம்.
பொதுப்பணித்துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
அறியாமை இருள் அகலவும், ஆன்மிக தீபஒளி அகிலமெங்கும் பரவி மகிழ்ச்சி பொங்க பரவசத்துடன் கொண்டாடும் பார் போற்றும் பண்டிகையாக தீபாவளி திருநாள் தொன்றுதொட்டு திகழ்கிறது. வேற்றுமை மறந்து, ஒற்றுமையுடன் உறவாடி மகிழ்ச்சியினை பரிமாறி கொள்ளும் பாரம்பரிய பண்டிகை தீபாவளி.
சாதி, சமயங்களை மறந்து தூய அன்பின் வழியில் இணைந்து தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடி மட்டற்ற மகிழ்ச்சியோடு தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வோம். நாடு வளம் பெறவும், புதுச்சேரி பொலிவு பெறவும், மக்கள் நலன் பெறவும், மாசில்லாத மாநிலமாக புதுச்சேரி திகழவும், மனிதநேயம் தழைக்கவும், மத்தாப்பு போல முகமலர்ச்சியோடு தீபாவளி திருநாளை இனிதே கொண்டாட எல்லாம்வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன்.
அமைச்சர் கந்தசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாநிலம் எதிர்நோக்கியுள்ள கடும் சவால்களை சமாளித்து மக்களின் மனமகிழ்ச்சிக்கு குறைவில்லா நிலையில் வளர்ச்சி பாதையை நோக்கி நடைபோடும் நம் அரசின் சார்பில் மாநில மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இத்தீபாவளி பண்டிகையை மொழி, இன, மத வேறுபாடின்றி சகோதரத்துவ மனப்பான்மையுடன் மகிழ்ச்சி உணர்வுடன் கொண்டாடி மகிழ்வோம்.
இந்நன்னாளில் முயற்சியுடன் கூடிய உண்மை, உழைப்பு, வாழ்வில் உயர்வை தரவல்லது என்பதை நினைவில் நிறுத்தி நம் வருங்கால வாழ்க்கை தீபாவளி திருநாள்போல ஒளியமாக அமைய அயராது முயல்வோம் என சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் வழிநின்று மாநிலத்தின் அனைத்து பிராந்திய மக்களுக்கும் மீண்டும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் ஷாஜகான் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
உலக மக்களை ஒன்றிணைக்கும் இந்த தீபாவளி திருநாளில் கடந்த கால கசப்பான எண்ணங்கள் புஷ்வாணம் போல அகன்று, இனிமையான மத்தாப்பு போன்ற வண்ணங்கள் வாழ்வில் ஒளிவீசட்டும். இந்த தீபஒளி திருநாளில் புதுச்சேரி வாழ்மக்களின் உள்ளங்களிலும் அவர்தம் இல்லங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் தீப ஒளியாய் பெருகட்டும். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறி, வாழ்வாதாரங்கள் உயர்ந்து தீமைகள் மக்களின் வாழ்நாளில் எல்லாவித நன்மைகளும் பெருகி இன்புற்று வாழ தீபஒளி திருநாள் வழிகோலட்டும்.