கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது

கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 287 கன அடியாக குறைந்தது. புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளநீர் செல்வதால் நேற்று 2-வது நாளாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-10-17 23:00 GMT
கடலூர்,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையினாலும், தென்பெண்ணையாற்று நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி தென்பெண்ணையாற்று பகுதியான கிருஷ்ணகிரி அணை நிரம்பி வழிந்து திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கட்டை தண்ணீர் வந்தடைந்தது.

நீர் வரத்து அதிகரிப்பால் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம் வழியாக தென்பெண்ணையாற்றில் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் வழியாக எல்லீஸ் அணைக்கட்டை வந் தடைந்தது.

பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, உண்ணாமலை செட்டிச்சாவடி, ஆல்பேட்டை பகுதி தென்பெண்ணையாற்று வழியாக பெருக்கெடுத்து ஓடி கடலூர் அருகே உள்ள தாழங்குடா கடலில் நேற்று முன்தினம் கலந்தது.

இந்த நிலையில் நேற்று தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து குறைந்தது. வினாடிக்கு 7 ஆயிரத்து 287 கன அடி தண்ணீர் வந்தது. முந்தையநாளை விட 2 ஆயிரத்து 113 கன அடி தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இருப்பினும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணையாற்றில் குறுக்கே செல்லும் கும்ந்தான்மேடு தரைப்பாலம் மூழ்கியதால் நேற்று 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தென்பெண்ணையாற்று தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க ஆற்றில் கூடுதலாக தடுப்பணை கட்ட வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள தடுப்பணை மற்றும் கரைகளை உயர்த்தவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, தென்பெண்ணையாற்றில் ஓடும் தண்ணீர் தாழங்குடா கடலில் கலக் கிறது. கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தென்பெண்ணையாற்றின் கரைகளை பலப் படுத்தி, தடுப்பணையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும். புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமித்து வைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் புதிதாக தடுப்பணை கட்டலாம். இதன் மூலம் தண்ணீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். மேலும் கடல் நீர் உள்புகுவதும் தவிர்க்கப்படும் என்றார். 

மேலும் செய்திகள்