பட்டீஸ்வரம் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவன் பிணமாக மீட்பு

பட்டீஸ்வரம் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவன் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2017-10-17 23:00 GMT
பட்டீஸ்வரம்,

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே உள்ள கீழகொற்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. இவருடைய மகன் பாரதிகுமார் (வயது 12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பாரதிகுமார் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்று நீர் சுழலில் சிக்கி பாரதிகுமார் மூழ்கினான். உடனே பாரதிகுமாரின் நண்பர்கள் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் இறங்கி பாரதிகுமாரை தேடினர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி பாரதிகுமாரை தேடினர். ஆனால் பாரதிகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன்பின் நேற்று காலை மீண்டும் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தனர். அப்போது ஆற்றின் அருகே சிறிது தொலைவில் உள்ள புதர்களுக்கு நடுவே இருந்து பாரதிகுமார் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பட்டீஸ்வரம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்