போலி டாக்டர் கைது ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் பறிமுதல்

ஆற்காடு அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-10-17 23:00 GMT
ஆற்காடு,

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த காவனூர் பகுதியில் போலி டாக்டர்கள் இருப்பதாக வேலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நல இணை இயக்குனர் (பொறுப்பு) சாந்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டாக்டர் சாந்தி, மருந்தக ஆய்வாளர் டாக்டர் மகாலட்சுமி ஆகியோர் திமிரி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் பிச்சாண்டி, ராஜசேகரன் மற்றும் போலீசார் உதவியுடன் காவனூர் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காவனூர் பச்சையப்பன் தெருவில் கீதா மருத்துவமனை என்ற பெயரில் இளங்கோவன் (வயது 42) என்பவர் மருத்துவமணை நடத்தி வருவது தெரியவந்தது. மேலும் இளங்கோவன், 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, ஒருவருட முதலுதவி பயிற்சி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இவரது வீட்டில் பிரசாந்தி எம்.பி.பி.எஸ். என்றும், பதிவு எண் 116242 எனவும் குறிப்பிடப்பட்ட போர்டு இருந்தது. பிரசாந்தி உறவினர் என்றும் அவர் சென்னையில் கிளினிக் நடத்தி வருவதாகவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இணை இயக்குனர் சாந்தி புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் இளங்கோவனை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்