சுங்கச்சாவடியில் சோதனை: போக்குவரத்து விதிகளை மீறிய ஆம்னி பஸ்-லாரிக்கு ரூ.36 ஆயிரம் அபராதம்

விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் நடந்த சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆம்னி பஸ்-லாரிக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-10-17 22:45 GMT
பெருந்துறை,

பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி, ஈரோடு பறக்கும்படை போக்குவரத்து அதிகாரி பாண்டியன், போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முத்துசாமி, முகுந்தன், ராஜ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். சோதனையில் அந்த பஸ் அருணாசலபிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பஸ் என்பதும், அந்த பஸ்சில் கோவையில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிவந்ததும் தெரியவந்தது. மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த ஆம்னி பஸ்சுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிக பாரம் ஏற்றிய லாரி

இதேபோல் அந்த வழியாக டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த லாரி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடலூர் மாவட்ட கள்ளக்குறிச்சிக்கு சென்றது தெரிந்தது. மேலும் அந்த லாரியில் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக 7 டன் அதிகமாக பாரம் ஏற்றப்பட்டு இருந்தது.

அதனால் அதிகாரிகள் அந்த லாரிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தார்கள். அதைத்தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்ட ஆம்னி பஸ்சும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்