செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக 110 பேர் சிகிச்சை
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக 110 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
செங்கல்பட்ட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் காரணமாக 110 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும். மேலும் டெங்குவை கட்டுபடுத்த வருவாய்த்துறையினரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான செயல்களை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கான ஆய்வுகளும் தற்போது நடந்துவருகிறது. பொதுமக்களுக்கு காய்ச்சல் வந்ததும் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் உலக சுகாதார நிறுவனம் வகுத்த சிறந்த மருத்துவம் உள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த ஆய்வில் முறையாக பணியில் ஈடுபடாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் உள்பட 3 பேரை பணிநீக்கம் செய்து அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.