பள்ளிப்பட்டு அருகே மாயமான விவசாயி ஒரு வாரத்திற்கு பின்னர் பிணமாக மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் காலனியை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 67). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (60).
பள்ளிப்பட்டு,
இவர்களுக்கு கிருஷ்ணவேணி (40), கற்பகம் (35) என 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. சஞ்சீவிக்கு சொந்தமான நிலம் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ளது. கடந்த 10–ந்தேதி வயலுக்கு செல்வதாக கூறி சென்ற சஞ்சீவி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் மாயமானதாக கடந்த 12–ந்தேதி பள்ளிப்பட்டு போலீஸ்நிலையத்தில் அவரது மனைவி லட்சுமி புகார் செய்தார்.
பள்ளிப்பட்டு சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து மாயமான சஞ்சீவியை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள புதரில் ஆண் பிணம் கிடப்பதாக பள்ளிப்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து பள்ளிப்பட்டு சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். புதரில் சிக்கி இருந்த பிணத்தை போலீசார் மீட்டனர். போலீஸ் விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் மாயமான சஞ்சீவி என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று அவர் வயலுக்கு சென்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்ததால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தது தெரியவந்தது. பள்ளிப்பட்டு போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.