மாங்காடு அருகே வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் 6 பேர் கைது
மாங்காடு அருகே வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் 6 பேர் கைது செய்யபபட்டனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், பொன்னம்பலம் சாலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 47), ஏலக்காய் மற்றும் மிளகு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அருண் என்பவர் அறிமுகமானார். இவர் சுரேஷ்குமாரின் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்தார். இதனால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் அருணின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவருடன் பழகுவதை சுரேஷ்குமார் நிறுத்தி உள்ளார்.
அதன்பின்னர் சுரேஷ்குமாரிடம் இருந்து பணம் கேட்டு அருண் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தும் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 25–ந்தேதி சென்னை, பாரிஸ் கார்னரில் மிளகு வியாபாரியிடம் இருந்து ரூ.18 லட்சம் பெற்ற சுரேஷ்குமார் அதை தனது நண்பரின் காரில் வைத்துக்கொண்டு தனது வீட்டை நோக்கி ஒட்டிச்சென்றார். கொளப்பாக்கம் பகுதியில் சென்றபோது சுரேஷ்குமார் சென்ற காரை மற்றொரு காரில் வந்த கும்பல் வழி மறித்து, தகராறில் ஈடுபட்டது. பின்னர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷ்குமாரை காரில் கடத்திய மர்ம கும்பல் அவரிடம் இருந்த ரூ.18 லட்சத்தை பறித்து கொண்டு மாமல்லபுரம் அருகே காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்றது.
போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ்குமார் மாங்காடு போலீசில் புகார் அளித்தார். போரூர் உதவி கமிஷனர் கண்ணன், மாங்காடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் கோவூர் அருகே காரில் வந்த அருண் (33), என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
சுரேஷை ஆட்கள் வைத்து கடத்தி பணத்தை கொள்ளை அடித்ததை அருண் ஒப்புக்கொண்டார். மேலும் அருணின் நண்பர்களான ரவி (37), எழில்குமார்(31), சார்லஸ்(36), சரவணபாபு (34), மதன்குமார்(34), ஆகியோரும் பணப்பறிப்பில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.17½ லட்சத்தை போலீசார் மீட்டனர்.