கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மாட்டு கொட்டகையில் தேங்கி இருந்த தண்ணீர்; ரூ.5 ஆயிரம் அபராதம்

கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மாட்டு கொட்டகையில் தண்ணீர் தேங்கி இருந்ததால், அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2017-10-16 23:25 GMT
மதுரை,

மதுரை மாநகராட்சி பொன்மேனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் வீரராகவராவ், ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா என பார்த்தனர்.

 அங்குள்ள மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகி இருப்பதை கண்டறிந்து உடனடியாக அதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அதே போல் ஒரு வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. அந்த வீட்டின் சுவரில் சிறந்த வீடு என எழுதி கலெக்டர் கையெழுத்து போட்டார்.

முன்னதாக கரிமேடு பகுதிகளில் ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நடுநிலை பள்ளிக்கு சென்ற ஆணையாளர், வகுப்பறையில் இருந்த குழந்தைகளிடம் டெங்கு காய்ச்சல் குறித்தும், குடிநீரை பாதுகாப்பாக மூடி வைப்பது குறித்தும் அறிவுரை கூறினார்.

பின்னர் அவர் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் தேக்கி வைத்த காரணத்தினால் உடனடியாக அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதே பகுதியில் மாட்டு கொட்டகையை ஆணையாளர் பார்வையிட்டார். அப்போது அங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்தது. எனவே உடனடியாக அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் கொட்டகையில் அருகில் இருந்த காலி இடத்தில் தேவையற்ற பழைய பொருட்கள் கிடந்தன. எனவே அந்த இடத்தின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ராஜேந்திரா குறுக்குத்தெருவில் வீடுவீடாக ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டபோது, தனியார் உணவகத்திற்காக சமையல் செய்யும் இடத்தில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை கண்டறிந்து உடனடியாக அபராதம் விதித்து மின்மோட்டாரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் பயன்பாடு இல்லாமல் உள்ள குடிநீர் தொட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறும், பயன்பாட்டில் உள்ள தொட்டிகளை மூடி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் அரசு, நகர்நல அலுவலர் சதிஷ்ராகவன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சித்திரவேல், முகமது ரசூல், உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்