சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியதை கணவன் கண்டித்ததால் பெண் தற்கொலை

பூதப்பாண்டி அருகே, சுய உதவிக்குழுவில் இருந்து கடன் வாங்கியதை கணவன் கண்டித்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-16 22:15 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுபுதூர், அண்ணாநகரை சேர்ந்தவர் சின்னத்துரை. ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (வயது42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஜெயந்தி கடந்த மாதம் கணவனுக்கு தெரியாமல் சுய உதவிக்குழுவில் இருந்து ரூ.25 ஆயிரம் கடன் பெற்றார். இதை அறிந்த சின்னத்துரை, ‘எதற்காக கடன் வாங்கினாய்?’ என மனைவியை கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயந்தி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று அதிகாலையில் சின்னத்துரை வழக்கம் போல் பால்வெட்டும் தொழிலுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் வீட்டில் உள்ள அறையில் ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்டநேரமாகியும் அறை திறக்கப்படாததால் அவருடைய மகன்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஜெயந்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்