கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து

கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 761 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

Update: 2017-10-16 23:00 GMT
கடலூர்,

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் தென்பெண்ணையாற்று நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை நேர நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 21 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள சாத்தனூர் அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் சாத்தனூர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் இந்த தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து தென்பெண்ணையாற்றில் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் வழியாக விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ் அணைக்கட்டை வந்தடைந்தது.

பொதுமக்கள் வேடிக்கை

அங்கிருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, உண்ணாமலைசெட்டிச்சாவடி, ஆல்பேட்டை பகுதி தென்பெண்ணையாற்று வழியாக பெருக்கெடுத்து ஓடி கடலூர் தாழங்குடா கடலில் நேற்று கலந்தது. நீர் வரத்து இருப்பதை அறிந்து சுற்றியுள்ள கிராம மக்கள் கரையோரமாக நின்று பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்த்தனர்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள குமந்தான்மேடு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி மாநில எல்லையில் அமைந்துள்ள தரைப்பாலத்தின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்ட பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையை பலப்படுத்தினர். மேலும் பொதுமக்கள் சிலர் கரையோரம் நின்று மீன்பிடித்தனர்.

தென்பெண்ணையாற்றில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஓராண்டுக்கு பிறகு

கர்நாடக மாநிலம் நந்திதுர்காவில் இருந்து கடலூர் வரை உள்ள தென்பெண்ணையாற்றின் மொத்த நீளம் 432 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் 62 கிலோ மீட்டர் பரப்பளவு பகுதி கடலூர் மாவட்டத்திலும், 42 கிலோ மீட்டர் பரப்பளவு விழுப்புரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. பெண்ணையாற்றில் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு கடந்த 14-ந் தேதி மாலையில் நீர் வரத்து காணப்பட்டது.

அங்கிருந்து பங்காரு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 180 கன அடி தண்ணீர் புதுச்சேரி மாநிலம் பாகூர் ஏரிக்கும், அதே அளவு தண்ணீர் சித்தேரி அணைக்கட்டில் இருந்து கீழ்பரிக்கல்பட்டு, மேல் பரிக்கல்பட்டு, கிருமாம்பாக்கம், குருவிநத்தம், ஆராய்ச்சிகுப்பம் மற்றும் உச்சிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலத்துக்கும், குளம், குட்டைக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

தாழங்குடா கடலில்

சொர்ணாவூர், சித்தேரி அணைக்கட்டுகளை கடந்து தென்பெண்ணையாற்று தண்ணீர் நேற்று காலை கடலூர் வழியாக தாழங்குடா கடலில் கலந்தது. தற்போது தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 9 ஆயிரத்து 761 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து இருப்பதால் கரையோரம் அமைந்துள்ள 60 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் கடலில் வழிந்தோட வசதியாக கடலூர் அருகே உள்ள தாழங்குடா முகத்துவாரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் ஆழப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்