நாலச்சோப்ராவில் பயங்கரம் கர்ப்பிணி ஓட, ஓட விரட்டி கொலை சகோதரியின் கணவர் வெறிச்செயல்
நாலச்சோப்ராவில் கர்ப்பிணி ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது சகோதரியின் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா மேற்கு டாங்கேவாடியை சேர்ந்த பெண் நிகத் சேக்(வயது24). கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் டாக்சி டிரைவராக உள்ளார். நேற்று மதியம் நிகத் சேக் தனது வீட்டில் தோழி நூர் பர்வீன்(22) என்ற பெண்ணுடன் பேசி கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பக்கத்து கட்டிடத்தில் வசித்து வரும் அவரது சகோதரியின் கணவர் சல்மான் ஹபிபுல்லா இஸ்மாயில் சேக் என்பவர் கத்தியுடன் வந்தார்.
திடீரென அவர் நிகத் சேக்கை கர்ப்பிணி என்று கூட பாராமல் சரமாரியாக குத்தினார். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நிகத் சேக் அவரிடம் இருந்து தப்பி தெருவில் ஓடினார். இருப்பினும் அவரை சல்மான் ஹபிபுல்லா இஸ்மாயில் சேக் விடவில்லை.
அவரை விரட்டி, விரட்டிச்சென்று குத்தினார். இதில் நிகத்சேக்கிற்கு தலை, கழுத்து, நெஞ்சு உள்பட 16 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இந்த தாக்குதலில் நிகத்சேக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்
முன்னதாக இதை தடுக்க முயன்ற நூர்பர்வீனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் கர்ப்பிணி ஓட, ஓட விரட்டி கொல்லப்பட்ட இந்த சம்பவத்தை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதற்கிடையே சல்மான் ஹபிபுல்லா இஸ்மாயில் சேக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் நிகத் சேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சல்மான் ஹபிபுல்லா இஸ்மாயில் சேக்கை வலைவீசி தேடிவருகின்றனர்.