சுருட்டப்பள்ளி தடுப்பு அணையில் இருந்து ஆரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு

ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் சுருட்டப்பள்ளி தடுப்பு அணை நிரம்பியதால் ஆரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2017-10-16 23:00 GMT

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடும் தண்ணீர் நாகலாபுரம், சுப்பாநாயுடுகண்டிகை, அச்சமநாயுடுகண்டிகை, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பிச்சாட்டூர் ஆரணியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் ஊத்துக்கோட்டை–திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும்.

இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937–ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டினர். இந்த தடுப்பு அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தேவைப்படும் போது ஊத்துக்கோட்டை ஏரிக்கு பாசன கால்வாய் மூலம் திறந்து விடப்படுவது வழக்கம்.

மேலும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும் போது வரும் வெள்ள நீர் அப்படியே ஊத்துக்கோட்டை வழியாக ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். தற்போது பிச்சாட்டூர் அணை முழுவதுமாக நிரம்பவில்லை.

எனினும் ஆந்திராவில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பிச்சாட்டூர் அருகே உள்ள காடுகளில் உள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் தற்போது சுருட்டப்பள்ளி தடுப்பு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் தடுப்பு அணை நிரம்பியதால் உபரி நீர் ஊத்துக்கோட்டை வழியாக பாயும் ஆரணி ஆற்றில் நேற்று முதல் திறந்து விடப்படுகிறது. பருவ மழை பொய்த்ததாலும், கோடை வெயில் காரணமாகவும் ஆரணி ஆறு கடந்த 2 வருடங்களாக முழுவதுமாக வறண்டு பாலை வனம் போல் காட்சி அளித்தது.

தற்போது ஆரணி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


மேலும் செய்திகள்