அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
நெல்லை,
அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
பேட்டிமுன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நெல்லை மாவட்டத்தில் அடுத்த மாதம்(நவம்பர்) 12–ந் தேதி பாளையங்கோட்டை கோர்ட்டு அருகில் உள்ள பெல் மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணிக்கான கால்கோள் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரசு விழாவாக...தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாவட்டந்தோறும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறோம். இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாடுவாதால் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் பயன் அடைகிறார்கள்.
மேலும் இந்த விழாவில் அந்தந்த மாவட்ட மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும், பல புதிய திட்டங்களையும் அறிவிக்கிறார்.
பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும்...தமிழகத்தில் அ.தி.மு.க.தான் முதன்மையான கட்சியாக உள்ளது. எங்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். எங்கள் கட்சியில் எந்த பிளவும் இல்லை. எங்களுக்கு தி.மு.க. மட்டும் தான் எதிர்க்கட்சி. அந்த கட்சி தமிழக மக்களுக்கு விரோதமான கட்சியாகும். இதனால் தான் தி.மு.க.வை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் உள்பட எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எங்கள் கட்சிதான் அமோக வெற்றி பெறும். விரைவில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேளிக்கை வரி குறைப்புஅமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 19 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பான முறையில் கொண்டாடி உள்ளோம். மற்ற மாவட்டங்களை விட நெல்லை மாவட்டத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். எம்.ஜி.ஆர். குறித்த கண்காட்சி நடத்தப்படும்.
சினிமாவிற்கான கேளிக்கை வரி 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதை இன்னும் குறைக்க வேண்டும் என்று சினிமாத்துறையினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கேளிக்கை வரியை குறைத்தது. இதற்கு சினிமாத்துறையினர் முதல்–அமைச்சரை சந்தித்து நன்றி கூறினார்கள். அதேபோல் நடிகர் விஜய்யும் முதல்–அமைச்சரை சந்தித்து நன்றி கூறுவதற்குதான் வந்தார். நடிகர் விஜய்யின் மெர்சல் படம் வெளியாகுவதில் எந்த சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை என்றார்.