மாமன்னன் ராஜராஜசோழன் சதயவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் அமைச்சர் பேச்சு

எந்த ஆண்டும் இல்லாத வகையில் மாமன்னன் ராஜராஜசோழன் சதயவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.

Update: 2017-10-15 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1032-வது சதய விழா வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். கலெக்டர் அண்ணாதுரை வரவேற்றார்.

விழாவையொட்டி சுற்றுலாத்துறை சார்பில் தற்காலிக சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும். மாமன்னன் ராஜராஜ சோழன் வரலாறு தொடர்பாக தொல்லியல் துறையின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்களை வினியோகிக்க வேண்டும். கலைபண்பாட்டுத்துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் நடத்த வேண்டும். சத்திரம் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விழா நடைபெறும் நாட்களில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவகுழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். சிறப்பு பஸ்கள் திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து இயக்க வேண்டும். சதய விழா நடைபெறும் 2 நாட்களில் பொது மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மாநகராட்சி சார்பில் பெரியகோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதோடு, பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு பேசும்போது, எந்த ஆண்டும் இல்லாத வகையில் சதயவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும். 24 துறைகளின் அதிகாரிகளும் கலெக்டரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து தேவையில்லாத வதந்திகள் விஷமிகளால் பரப்பப்படுகிறது. அதிகாரிகள் நன்றாக செயல்பட்டு டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, காவிரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் சதயவிழா குழு தலைவர் துரை.திருஞானம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்