பல்லாரி டவுனில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.500 நோட்டுக்கு பதிலாக துண்டுச்சீட்டு வந்ததால் அதிர்ச்சி

பல்லாரி டவுனில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.500 நோட்டுக்கு பதிலாக துண்டுச்சீட்டு வந்ததால் வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.

Update: 2017-10-15 23:30 GMT

பெங்களூரு,

பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கர்நாடக மாநிலம் பல்லாரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். மேலும் அந்த வங்கி கணக்கிற்கு ஏ.டி.எம். கார்டும் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல்லாரி டவுனில் உள்ள அந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.8 ஆயிரம் பணம் எடுக்க முயன்றார்.

அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ரொக்கமாகவும், மீதி 500 ரூபாய் நோட்டுக்கு பதிலாக ஒரு துண்டுச்சீட்டும் வந்தது. அந்த துண்டுச்சீட்டு 500 ரூபாய் நோட்டு அளவில் சரியாக வெட்டப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்து மோசடி செய்யப்பட்டு இருந்தது ரமேசுக்கு தெரியவந்தது. மேலும் ரமேசின் செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில் அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் முறையிட முயன்றார். ஆனால் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் அவரால், வங்கி அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் அவர் இப்பிரச்சினை குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் அங்கு திரண்ட பொதுமக்களும், வங்கியின் வாடிக்கையாளர்களும் அந்த ஏ.டி.எம். மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் இப்பிரச்சினை குறித்து ரமேஷ் பல்லாரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று பல்லாரி டவுனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்