உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்.

Update: 2017-10-15 23:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100–க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி உடல் நலம் குறித்து தனித்தனியாக விசாரித்தார். நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் போன்றவற்றை வழங்கினார். ஆஸ்பத்திரி வளாகத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் விதமாக நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆளும் ஆட்சியாளர்கள் இது குறித்து இனிமேலும் அலட்சியம் செய்யக்கூடாது. மத்தியகுழு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை முறையாக வெளியிட வேண்டும். ஏனென்றால் இதுவரை தமிழகத்தில் 200–க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் இறந்து இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளிவருகிறது.

ஆனால் உண்மை நிலையை மறைத்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக மத்தியகுழு கூறியது தமிழக அரசை பாதுகாப்பது போல் இருக்கிறது. இது ஏற்புடையது அல்ல. கொசு ஒழிப்பு பணியில் போதிய நிரந்தர ஊழியர்கள் தமிழகத்தில் இல்லை. கொசு ஒழிப்புக்காக மருந்து தெளிப்பவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் 40 சதவீதம் காலியாக உள்ளது. மத்திய குழு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் செல்லவில்லை. டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம் திருவள்ளூர் மாவட்டம் தான். மத்திய குழுவினர் முதலில் இங்கு வந்துதான் ஆய்வு செய்திருக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து மாத்திரைகள், டாக்டர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் விக்டரி மோகன், மாநில நிர்வாகி மனோகர், மாவட்ட துணைத்தலைவர் கே.ஆர்.அன்பழகன், திருவள்ளூர் வட்டார தலைவர் சிவகுமார், நிர்வாகிகள் வடிவேலு, பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்