‘எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பணமும், அதிகாரமும் பயன்படுத்தப்படுகிறது’ பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காக பணமும், அதிகாரமும் பயன்படுத்தப்படுவதாக பா.ஜனதா மீது சிவசேனா கண்டனம் தெரிவித்தது.
மும்பை,
சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:-
நாட்டில் தற்போது உருவாக்கப்படும் சூழலில், எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. இதற்காக பணமும், அதிகாரமும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தேர்தல்களில் வெற்றி பெற சாத்தியமான அனைத்து ஊழல் வழிமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சூழல் நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும், சுதந்திரத்துக்கும் மிகவும் ஆபத்தானது.
மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இணைத்து, அவர்களை களத்தில் இறக்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிகாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாண்டுப் வார்டு இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற வெற்றி தூய்மையானது தானா? பாண்டுப்பில் காங்கிரஸ் கவுன்சிலர் இறந்ததாலேயே அங்கு இடைத்தேர்தல் நடந்தது.
நல்ல அடையாளம் அல்ல
ஆனால், அங்கு காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவரையே தத்தெடுத்து, இடைத்தேர்தலில் அவரை களமிறக்கினார்கள். ஏராளமான கொள்கைகளையும், அறிவார்ந்த, அனுபவம் வாய்ந்த தலைவர்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் பழமைவாய்ந்த கட்சி (பா.ஜனதா), தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அடுத்த கட்சி வேட்பாளர்களை கடன் வாங்குவது நல்ல அடையாளம் அல்ல.
அரசியல் எதிரிகளை நீக்குவதற்கான இதுபோன்ற முயற்சிகள் புத்திசாலித்தனமாக தெரிந்தாலும், பினாமி சொத்துகளை போல், இதுவும் கண்டிப்பாக ஒருநாள் திருப்பி தாக்கும் என்பதை பாண்டுப் இடைத்தேர்தல் வெற்றியாளர்கள் மறந்துவிட கூடாது.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.
பிரமிளா பாட்டீல் மருமகள்
பாண்டுப் 116-வது வார்டு கவுன்சிலராக இருந்த பிரமிளா பாட்டீல் (காங்கிரஸ்) மரணம் அடைந்ததாலேயே அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜாக்ருதி பாட்டீல், பிரமிளா பாட்டீலின் மருமகள் ஆவார். இதனை அடிப்படையாக கொண்டே பா.ஜனதாவை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.