மதுரையில், டெங்கு காய்ச்சலால் பரிதாபம்: நிறைமாத கர்ப்பிணி பலி

டெங்கு காய்ச்சல் காரணமாக, வயிற்றில் இருந்த குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். மேலும், கல்லூரி மாணவி, பள்ளி மாணவி, மாணவன் ஆகியோரும் டெங்குவால் உயிர் இழந்தனர்.

Update: 2017-10-14 23:00 GMT
மதுரை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு தினமும் உயிர்பலிகள் நிகழ்வது தொடர்கதையாகி விட்டது.

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 4 பேர் பலியானார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

மேலூர் அருகே உள்ள தேத்தாம்பட்டியை சேர்ந்தவர், சரவணன். இவருடைய மனைவி சாவித்திரி (வயது27). நிறைமாத கர்ப்பிணியான இவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அதனால் இவரை தும்பப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்றிலேயே சாவித்திரியின் குழந்தை இறந்துவிட்டது. இதனால் சாவித்திரியின் நிலை மேலும் மோசமடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சாவித்திரி நேற்று பரிதாபமாக இறந்தார்.

உசிலம்பட்டி அருகே உள்ளது சொக்கத்தேவன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த கணேசன் மகள் மகாதேவி (15). இவர் நாட்டாமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந் தார். கடந்த சிலநாட்களாகவே தொடர்ந்து காய்ச்சல் பாதிக்கப்பட்டு வந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

உசிலம்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரம் புதூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் கபிலன்(9). இவர் இதே ஊரில் 4-வது படித்து வந்தார். இவரும் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இருவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது.

வாடிப்பட்டியை அடுத்த போடிநாயக்கன்பட்டி திடீர் நகரை சேர்ந்த சுப்பிரமணி மகள் காயத்திரி(19). இவர் நிலக்கோட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காயத்திரிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே காயத்ரி பரிதாபமாக இறந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த ஆசிரியை சாந்தி, செல்வி, மாணவன் புவனேஸ்வரன் ஆகிய 3 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்