தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது புகார்: போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் மீது புகார் அளித்தனர்.

Update: 2017-10-14 23:00 GMT
சின்னாளபட்டி,

சின்னாளபட்டி, அம்பாத்துரை, நடுப்பட்டி, ஜே.புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒரு கடையில் தீபாவளி சீட்டு கட்டியதற் கான ரசீதுடன் நேற்று சின்னாளபட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தீபாவளி சீட்டு நடத்தி தங்களை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, அவர்கள் கூறும்போது, சின்னாளபட்டி என்.சி.சி. தெருவை சேர்ந்த குமரன் என்பவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையின் போது அவரிடம் சீட்டு பணம் செலுத்தியவர்களுக்கு இனிப்பு, காரம், மளிகை சாமான்கள், பாத்திரங்கள் மற்றும் ஆட்டு இறைச்சி ஆகியவைகளை வழங்கி வந்தார்.

இதனால் இந்த ஆண்டு தொடக்கம் முதலே அவரிடம் எங்கள் வருமானத்துக்கு ஏற்ப மாதம் ரூ.50 முதல் ரூ.500 வரை செலுத்தி வந்தோம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவர் எங்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நாங்கள் அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றோம். அப்போது சுவிட்ச் ஆப் என வந்தது. இதையடுத்து கடைக்கு சென்று பார்த்த போது கடை பூட்டப்பட்டிருந்தது. அவருடைய வீட்டிலும் ஆட்கள் யாரும் இல்லை. உடனே அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அப்போது தான் அவர் எங்களை மோசடி செய்தது தெரியவந்தது. எனவே எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.

இதையடுத்து பேசிய போலீசார் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக கூறப்படும் குமரன் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணையில் அவர் மோசடி செய்தது தெரியவந்தால் அவரிடம் இருந்து பொதுமக்கள் செலுத்திய பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் செலுத்தினர் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், குமரன் மீது புகார் அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்