நகை வாங்குவதுபோல் நடித்து 6 பவுன் நாணயங்கள் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை

திருப்பூரில் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 6 பவுன் தங்க நாணயங்களை மர்ம ஆசாமிகள் துணிகரமாக திருடிச்சென்றுள்ளார்.

Update: 2017-10-14 23:15 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் கருவம்பாளையம் திருநகரைச்சேர்ந்தவர் ஜோதி (வயது 58). இவர் பாண்டியன் நகரில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவருடைய கடைக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் வந்தனர். கடையில் இருந்த 2 ஆண் ஊழியர்கள், அவர்கள் 2 பேரையும் உபசரித்து உட்காருமாறு கூறி உள்ளனர்.

அப்போது அந்த 2 பேரில் ஒருவர் ரூ.150-க்கு ஐம்பொன் நகை வாங்கியுள்ளார். பின்னர் ரூ.300-க்கு தங்கத்தகடு வாங்கியுள்ளார். பின்னர் தங்க நாணயங்களை எடுத்து காண்பிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் பிளாஸ்டிக் கவர்களில் இருந்த ¼, பவுன், ½பவுன், மற்றும் 1 பவுன் மதிப்புள்ள தங்க நாணயங்களை எடுத்து காட்டி உள்ளனர். அவர்கள் இருவரும் அதில் இருந்த தங்க நாணயங்களை எடுத்து பார்த்துள்ளனர்.

மேலும் நாணயத்தின் எடை மற்றும் விலையை ஊழியரிடம் கேட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து 2 பேரும் தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டு வந்து தங்க நாணயம் வாங்கிக்கொள்வதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் கடை ஊழியர் தங்க நாணயங்கள் இருந்த பையை எடுத்து உள்ளே வைத்த போது அதில் இருந்த தலா 1 பவுன் எடை கொண்ட 6 தங்க நாணயங்கள் குறைவாக இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஊழியர் கடை உரிமையாளர் ஜோதியிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அதில் மர்ம ஆசாமிகளில் ஒருவன் 6 பவுன் தங்க நாணயங்களையும் எடுத்து தனது பேண்ட்டில் உள்ள பின்பக்க பாக்கெட்டில் வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்து ஜோதி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையில் தங்க நாணயங்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். திருப்பூரில் நகை வாங்குவது போல் நடித்து 6 பவுன் நாணயங்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்