இளைஞர்கள் விமானப்படையில் சேர ஆர்வம் காட்ட வேண்டும் வேலூரில் ஏர்வாய்ஸ் மார்ஷல் பேட்டி

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விமானப்படைக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெற உள்ளது. இளைஞர்கள் விமானப்படையில் சேர ஆர்வம் காட்ட வேண்டும் என ஏர்வாய்ஸ் மார்ஷல் ஓ.பி.திவாரி கூறினார்.

Update: 2017-10-14 22:45 GMT
வேலூர்,

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம் வேலூர் ஊரீசு கல்லூரியில் கடந்த 9-ந் தேதி மற்றும் 12-ந் தேதி என 2 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வில் வெறும் 26 பேர் மட்டுமே தேர்வானார்கள். இதுதொடர்பாக ஏர்வாய்ஸ் மார்ஷல் ஓ.பி.திவாரி நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது-

இந்திய விமானப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரம் பணியிடங்கள் காலியாகின்றன. அதனை நிரப்ப ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வேலூர் ஊரீசு கல்லூரியில் வைத்து ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கு அதிகளவு ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகம் ராணுவத்தில் சேர்கின்றனர். ஆனால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கப்பல்படை, விமானப்படையில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்த பணிகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே அதற்கு காரணம் ஆகும். எனவேதான் விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமை வேலூர் மாவட்டத்தில் நடத்தினோம்.

இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆனால் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்ததால், இயற்பியல் மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களையே தேர்வு செய்தோம். இந்த முகாமில் 500 பேரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் வெறும் 26 பேர் மட்டுமே தேர்வானார்கள். நடந்து முடிந்த முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் உடலளவிலும், திறமையிலும் சிறப்பானவர்களாக இருந்தார்கள். ஆனால் இயற்பியல், கணித பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தனர்.

எனவே பெரும்பாலானோர் தேர்வு பெறுவதற்கான வாய்ப்பை இழந்தனர். தற்போது தேர்வானவர்களுக்கு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களில் தேர்வானவர்களுடன் சேர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் இறுதி பட்டியலில் வெளியிடப்படும். இதில் தேர்வாகும் இளைஞர்கள் 30 ஆண்டுகள் விமானப்படையில் பணிபுரிவார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளமும், உயர் பதவிகளும் கிடைக்கும்.

இதனையடுத்து விமானப்படைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘ஆன்-லைன்’ மூலம் தேர்வு நடைபெறும். அதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதி தேர்வு நடைபெறும். இதில் அதிகளவு இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும். விமானப்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வின் கமாண்டர்கள் சைலேஷ், பினாக்கி சட்டர்ஜி, தாசில்தார் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்